மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-02-22 23:30 GMT
கூடலூர்,

தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் 25-வது ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ரவிச்சந்திரன், கோவை மண்டல செயலாளர் சுரே‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாலமோன் கலந்து கொண்டு பேசினார். பொருளாளர் ஹரிராம் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாக செயல்படுத்திட வேண்டும். வேலைப்பளு இல்லா ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வாரியத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வாரியத்தை வலியுறுத்துவது, 22-2-2018 அன்று 12(3) முத்தரப்பு சரத்துப்படி ஒரு லட்சம் இணைப்புக்கு ஒரு வருவாய் பிரிவு அனுமதிக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1-4-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கேங்மேன் பணி மற்றும் வாரிசு வேலைக்கு 5-ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்து குறைந்தபட்ச கல்வி தகுதியாக அறிவிக்க வேண்டும். பணிக்காலத்தில் 3 பதவி உயர்வு என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தூத்துக்குடி தலைவர் ஜெயபிரகா‌‌ஷ், மதுரை பொருளாளர் ராமநாதன், நிர்வாகி ராமசுந்தரம் உள்பட மாநில, மண்டல, திட்ட, கோட்ட மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட செயலாளர் பிரசன்னகுமார் வரவேற்றார். முடிவில் கோட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

இதனைதொடர்ந்து தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாலமோன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2007-ம் ஆண்டு கூடலூரில் கோட்ட அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனால் கூடலூரை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்பட்டது. தமிழக மின்வாரியத்தில் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மனதார வரவேற்கிறோம். 500 இளநிலை உதவியாளர்கள், 400 உதவி பொறியாளர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்வாரியத்தில் பல ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாக பாடுபட்டு சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது. எனவே உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரியத்துக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் மின்கணக்கீடு பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக அரசு தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்