பள்ளி வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் மாணவர்கள் அவதி

பட்டுக்கோட்டையில் பள்ளி வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2020-02-23 23:00 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள நாடியம்பாள்புரத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் இயங்குகிறது. இதன் காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் குப்பை தரம்பிரிக்கும் பணியும் நடக்கிறது. இது மாணவ-மாணவிகளை மட்டும் அல்லாமல் ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் என அனைவரையும் அவதிக்கு ஆளாக்கி உள்ளது. மதிய நேரத்தில் துர்நாற்றம் வீசும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிடுவது மாணவ, மாணவிகளின் பெற்றோரை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

அவல நிலை

மத்திய, மாநில அரசுகள் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் பட்டுக்கோட்டையில் இந்த அவல நிலையா? என்று பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவிக்கின்றனர். தொற்று நோய் பரவும் முன்பு குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பட்டுக்கோட்டை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பட்டுக்கோட்டையில் செயல்படும் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடலாம். அதை விட்டுவிட்டு பள்ளி வளாகத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது இங்கு செயல்பட்டு வரும் பள்ளி, அங்கன்வாடி, வட்டார கல்வி அலுவலகம் ஆகியவற்றை மாற்ற வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்