விழுப்புரத்தில் காதல் திருமண புகார்-கைது எதிரொலி: ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

விழுப்புரத்தில் காதல் திருமண புகார், கைது எதிரொலியாக ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-02-23 22:30 GMT
திருச்சி,

விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சரத்குமார் (வயது 27). அதே போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தவர் பிரியங்கா (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையில் சரத்குமார், விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமியை பிளஸ்-2 படித்த போதிருந்தே காதலித்து வந்துள்ளார். 2 பெண்களையும் காதலித்து வந்த சரத்குமார், அவ்வப்போது அவர்களை தனிமையில் சந்தித்தும் தனது காதலை வளர்த்துள்ளார். 2 பேரிடமும் அவர் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சரத்குமாருடன் இனி பேசக்கூடாது என்று பிரியங்கா கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் சரத்குமார், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ராஜலட்சுமியை கடந்த 21-ந் தேதி சரத்குமார் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சரத்குமார் உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டதாக விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரத்குமார் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.

பணியிடை நீக்கம்

ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் சக பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய சம்பவம் ரெயில்வே போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காதல் திருமணம் தொடர்பான புகார் மற்றும் அவர் கைது நடவடிக்கையில் சிக்கியது, பிரியங்காவின் செயல்கள் தொடர்பாக திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் சரத்குமார் மற்றும் பிரியங்கா ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கையை அவர் எடுத்தார். சரத்குமார், பிரியங்கா ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்