தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-02-24 23:00 GMT
திருவொற்றியூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த 7 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மோதிரம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை. கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறோம். தி.மு.க. ஆட்சியில் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு அ.தி.மு.க. அரசு வட்டிகட்டி வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் இலவச டி.வி. வழங்கியது ஊதாரித்தனமான செயல். விரக்தியின் உச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எப்படி ஆட்சியை கவிழ்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

முன்கூட்டியே தேர்தல் நடக்காது

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று தவறான தகவலை பரப்புகின்றனர். அது உண்மை அல்ல. வதந்திதான். முன்கூட்டியே தேர்தல் நடக்காது.

அ.தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சி காலம் முழுமையடைந்த பிறகுதான் வழக்கம்போல் தேர்தல் நடைபெறும். 2021-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

நிர்பயா நிதி

நிர்பயா நிதியை பயன் படுத்திதான் அரசு பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்புக்கு தி.மு.க.வினர் பாராட்ட மறுக்கிறார்கள். தி.மு.க. தமிழக மக்களால் தனித்து விடப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி செயலாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்