நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி

நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-24 21:47 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கொட்டவாடி அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 60) என்பவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென்று தான் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை, தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து முதியவர் மாரிமுத்து, போலீசாரிடம் கூறும் போது, எனக்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்தேன். அதற்கான பணத்தை இதுவரை தரவில்லை. பணம் தரும்படி கேட்டதற்கு நிலம் வாங்கியவர் மற்றும் அவரது உறவினர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே நான் விற்பனை செய்த நிலத்திற்கான பணத்தை பெற்றுத்தரவேண்டும். இல்லையென்றால் எனது நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று கூறினார். இதையொட்டி சேலம் டவுன் போலீசார் மாரிமுத்து மனுமீது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவிகள்

இதே போன்று வீரகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் ஜெனிலியா, ஜெனிபர் ஆகிய 2 மாணவிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். அதில் அக்காள், தங்கையான நாங்கள் இருவரும் வீரகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7, 8-ம் வகுப்பு படித்து வந்தோம். எங்களுக்கு தாய் இல்லை. தந்தை மட்டும் உள்ளார்.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் பணம் கட்ட வில்லை என்று கூறி பள்ளியில் இருந்து நிர்வாகிகள் எங்களை நீக்கி விட்டார்கள். இதனால் வீரகனூர் அரசு பள்ளியில் சேர சென்ற போது இந்த வருடம் சேர்க்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் இந்த ஒரு வருடம் வீணாகி விடும் என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் இருவரையும் வீரகனூர் அரசு பள்ளியில் இந்த வருடமே சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

புறம்போக்கு நிலம்

சேலம் முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் கொடுத்த மனுவில், லக்குவம்பட்டி பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். அந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த கோர்ட்டு நிலத்தை மீட்க உத்தரவிட்டு உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவுப்படி புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்