நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-25 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், கிணறுகள், வீட்டுமனைகள் ஆகும். இதனால் சிறு விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

மேலும் விவசாய நிலங்களை இழந்தது வாழ்வாதார பிரச்சினை என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்ததால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு சந்தை மதிப்பை போன்று 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் வழங்குவதை போன்று நிலத்துக்கான சந்தை மதிப்பை கணக்கிட்டு அதிகபட்ச இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல் விவசாய பயிர்கள், கிணறுகள், வீடுகள், மரங்களுக்கு 20 ஆண்டு கால பலன்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி, மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் பெருமாள், பொருளாளர் தங்கவேல், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்