கம்பத்தில், மரக்கடையில் பயங்கர தீ: ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கம்பத்தில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2020-02-25 23:00 GMT
கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம் நெல்லுக்குத்தி புளியமரம் தெருவை சேர்ந்தவர் போஸ். இவர் கம்பம் பஸ் நிலையம் அருகே மரக்கடை வைத்துள்ளார். மேலும் கதவுகள், ஜன்னல், நாற்காலி, அலமாரி உள்ளிட்டவை செய்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் மரக்கட்டைகளை சேகரித்து வைத்திருந்தார்.

இந்தநிலையில் இவரது கடை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 8.30 மணியளவில் மரக்கடையில் திடீரென தீப்பிடித்தது. ஆனால் அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. இதுகுறித்து கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் மரக்கட்டைகள் பற்றி எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம், கடமலைக்குண்டு, போடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் கூட்டாக சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கம்பம் நகராட்சி மற்றும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 3 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான தேக்கு, வேங்கை, வேம்பு போன்ற விலை உயர்ந்த மரக்கட்டைகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அருகில் இருந்த கண்ணாடி கடை, ரெடிமெட் நிறுவனம் உள்ளிட்ட கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பஸ் நிலையத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்