வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது - 27 பவுன் நகை பறிமுதல்

வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-02-25 22:30 GMT
வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் மணிமுருகன் (வயது 39). விவசாயி. நேற்று முன்தினம் இவர், வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். பின்னர் அவர் மணிமுருகனிடம் முகவரி கேட்பது போல நடித்து, திடீரென தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுக்கவே, மணிமுருகனின் சட்டைப்பையில் இருந்த ரூ.300-ஐ பறித்து கொண்டு அந்த நபர் ஓடினார். இதனையடுத்து மணிமுருகன் ‘திருடன் திருடன்‘ என சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த நபரை விரட்டி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பனூரை சேர்ந்த குட்டையன் என்ற கோவிந்தராஜ் (38) என்று தெரியவந்தது. இவர், 4 அடியே உயரம் இருப்பதால் குட்டையன் என்று அழைக்கப்பட்டார்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திருட்டு, வழிப்பறியில் கோவிந்தராஜிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு கோவையை சேர்ந்த சுப்புராஜ் வத்தலக்குண்டுவுக்கு பஸ்சில் வந்தபோது, அவரிடம் இருந்து 20 பவுன் நகையை கோவிந்தராஜ் திருடியிருக்கிறார்.

இதேபோல் வத்தலக்குண்டு திருநகரை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரின் வீட்டில், கடந்த மாதம் 7 பவுன் நகையை திருடிய வழக்கிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. இதனையடுத்து கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட கோவிந்தராஜ், அந்த பணத்தின் மூலம் கொடைக்கானலுக்கு சென்று உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்