எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு

எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2020-02-26 00:30 GMT
எடப்பாடி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்றார். முதலில், எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக எடப்பாடி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்-அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

சர்க்கரை பொங்கல்

அதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் முதல்-அமைச்சருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர், முருகன், நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரியம்மன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி ஒன்றியகுழு தலைவர் குப்பம்மாள் மாதேஸ், கொங்கணாபுரம் ஒன்றியகுழு தலைவர் கரட்டூர் மணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..

திடீர் ஆய்வு

பின்னர் அரசு பயணியர் மாளிகைக்கு சென்று அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் பயணியர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையம், எக்ஸ்-ரே பிரிவு மற்றும் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுகளாக சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர் மகப்பேறு பிரிவுக்கு சென்ற முதல்-அமைச்சர், அங்கு பிறந்த குழந்தைகளை பார்வையிட்டார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டு சுகப்பிரசவமான வித்யா என்ற பெண்ணுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்துடன், குழந்தைக்கான பிறப்பு சான்றிதழையும் வழங்கினார்.

வரவேற்பு

அதன்பிறகு டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேசிய முதல்-அமைச்சர், நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அன்புடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். முன்னதாக அரசு ஆஸ்பத்திரிக்கு ஆய்வு செய்ய வந்த அவருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் செய்திகள்