கல்வராயன்மலை வனப்பகுதியில், 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன்மலை வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2020-02-25 22:00 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் 2 குழுக்களாக பிரிந்து கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டு, சாராய ஊறலை கைப்பற்றி அழித்து வருகின்றனர். மேலும் சாராயம் கடத்துபவர்கள் மற்றும் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தனிப் பிரிவு போலீசார் நேற்று கல்வராயன்மலை வனப்பகுதியில் உள்ள குரும்பாலூர் ஏரிக்கரை அருகில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரை அருகில் பேரல்களில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி, அதனை கீழே கொட்டி அழித்தனர்.

இதேபோல் தனிப்பிரிவு போலீசார் கவியம் நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நீர்வீழ்ச்சியின் அருகில் பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அதனை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்த புகார்களின் பேரில் குரும்பாலூர் மற்றும் கவியம் பகுதியில் சாராய ஊறல் பதப்படுத்தி வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்