வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2020-02-26 22:15 GMT
அரியலூர், 

அரியலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலுள்ள குளிர்பதன கிடங்கினை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த குளிர் பதன கிடங்கினை விவசாயிகளுக்கு வாடகை முறையில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு தற்போது புளி, தட்டைப்பயிர், கொள்ளு ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மக்காச்சோளம் மறைமுக ஏல நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யும்போது போதிய விலை கிடைக்கவில்லை என்றால் குடோனில் இருப்பு வைத்து, சரியான விலை கிடைக்கும்போது விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,701 அதிக பட்ச விலையாகவும், ரூ.1,677 சராசரி விலையாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விவசாயிகளுக்கு சரியான எடை, மறைமுக ஏலம், உடனடி பணப்பட்டுவாடா, சேமிப்பு வசதிகள், இலவச காப்பீடுத் திட்டம், பொருளீட்டு கடன் வசதி மற்றும் உலர் கள வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆய்வின் போது, கோட்டாட்சியர் பாலாஜி, விற்பனைக்கூட செயலாளர் ஜெயகுமார், விற்பனைக்குழு மேலாளர் அன்பழகன், துணை வேளாண்மை அலுவலர் பிச்சை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றித்துக்குட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடையின் அணைக்கட்டை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஆண்டிமடம் தாசில்தார் குமரய்யா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்