தேனி அருகே, தலைமை ஆசிரியர் வீட்டில் பணம்-நகை திருட்டு - போலீசார் விசாரணை

தேனி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் பணம், நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-02-26 22:15 GMT
தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி ஜவகர்லால்நேரு தெருவை சேர்ந்தவர் கோபாலகிரு‌‌ஷ்ணன் (வயது 54). இவர் மூணாறு அருகே சூரியநல்லியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாலா, முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று இவர்கள், இருவரும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில், கோபாலகிரு‌‌ஷ்ணனின் தாய் சரஸ்வதி (80) உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். 

இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் திருட்டு போயிருந்தது. சரஸ்வதி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கோபாலகிரு‌‌ஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்