கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு உறவினர்கள் மறியல்

கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-27 23:00 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 30) ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் வடபட்டினம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் - மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அந்த ஆட்டோவில் ஆக்கிணாம்பட்டு கிராமம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தணிகைவேல் (33), ஏழுமலை (35), பிரகாஷ் (28), பிளஸ்- 2 மாணவி ராஜலட்சுமி (16) மற்றும் பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த திலக் சாம்ராஜ் (32) ஆகியோர் பயணம் செய்தனர். தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து சென்ற போது எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆட்டோ டிரைவர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தணிகைவேல் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை நெல்வாய்பாளையம் சந்திப்பில் சாலையில் குறுக்கே மரக்கட்டைகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் திடீர் மறிலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு் மகேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் தாசில்தார் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இந்த பகுதியில் 4 கல்குவாரிகள் உள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை மூட வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவி்த்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் கடையடைப்பும் நடந்தது.

மேலும் செய்திகள்