குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசியலை விட்டு விலக தயார் தளவாய்சுந்தரம் சவால்

குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசியலை விட்டு விலக தயார் என தளவாய்சுந்தரம் சவால் விடுத்துள்ளார்.

Update: 2020-02-28 00:00 GMT
கன்னியாகுமரி,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொட்டாரம் காந்தி திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு 72 ஏழை விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இன்று கவிழ்ந்து விடும், நாளை கவிழ்ந்து விடும் என்று சொன்ன எதிர்கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி அரசு 4 ஆண்டுகளை கடந்து 5-வது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் நம்பிக்கை எங்களுக்கு வந்து விட்டது.

விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தல் வரவே வராது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டியுள்ளார். மேலும், பேரூராட்சிகளுக்கான தேர்தலை ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு நடத்தும்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் மொத்தம் 10 பேரூராட்சிகளில் 9 பேரூராட்சிகளை பெண்களுக்கு ஒதுக்கி பெருமை சேர்த்துள்ளது அ.தி.மு.க. அரசு. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உடையவர்கள் வருகிற 1-ந் தேதி சுசீந்திரம் தேரூர் ரோட்டில் உள்ள அசோகா மஹாலில் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் அனைவரும் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறோம்.

மணிமண்டபம்

களியக்காவிளை சோதனை சாவடியில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வில்சனின் மகளுக்கு நாளை (அதாவது இன்று) அரசு பணிக்கான ஆணை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அதற்காக அ.தி.மு.க. கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க அவரது சொந்த ஊரான தேரூரில் தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு இடம் இல்லாததால் தோவாளையில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்