காரைக்கால்-இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் மத்திய இணை மந்திரி தகவல்

காரைக்கால்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து தொடங்கப்படும் என்று மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Update: 2020-02-28 00:25 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். கூட்டத்தில், புதுச்சேரி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், அரசு தலைமை செயலர் அஸ்வனி குமார், காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சம்பத் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

கப்பல் போக்குவரத்து

காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்தும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த தலைமை செயலர் தலைமையில் 2 செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அவர்களது பரிந்துரையின் பேரில் கப்பல் போக்குவரத்து குறித்து விரைந்து முடிவு செய்யப்படும். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கூறுகையில், காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்கு வரத்து தொடங்கினால் குறுகிய நேரத்தில் சென்றடையலாம். 4 ஆண்டு முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கட்டணமாக 90 டாலர் முதல் 100 டாலர் வரை நிர்ணயிக்கப்படும். நிதிச்சுமை இல்லாத வகையில் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. இதனால் இருநாட்டு மக்களும் பயனடைவார்கள். இந்த திட்டம் காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்’ என கூறினர்.

மேலும் செய்திகள்