‘ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

‘ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2020-02-28 22:15 GMT
திண்டுக்கல்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் குறை கூறி வருகின்றனர். ஆனால் ‘தினத்தந்தி’ உள்ளிட்ட நாளிதழ்களில் கடும் நெருக்கடியிலும் மக்களுக்கு வரிவிதிக்காத பட்ஜெட், வேளாண்மை, கல்வி என அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த பட்ஜெட் என்று பாராட்டியுள்ளனர்.

புதுடெல்லியில் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை போல் தமிழகத்திலும் மோதல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும். அதனை அரசியலாக்கி தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று மு.க. ஸ்டாலின் கனவு காண்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் பலிக்காது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. தலைமையிலான அரசு தான்.

மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்ததன் காரணமாகவே தமிழகத்துக்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்தன என்று தி.மு.க. தலைவர் கூறுகிறார். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. அரசு அந்த திட்டங்களுக்கு இணக்கமாக செயல்படுகிறது. எனவே ஜால்ரா வேறு, இணக்கமாக செயல்படுவது வேறு என்பதை மு.க.ஸ்டாலின் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சட்டசபையில் நான் பேசும் போதெல்லாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் கோபம் குடிகொண்டுவிடுகிறது. அவருடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். முகத்தை பார்த்து அவர் என்ன குடும்பமா? நடத்தப்போகிறார். சட்டசபையில் மக்கள் பிரச்சினையை பேசாமல் முதல்-அமைச்சரின் முகத்தை பார்க்கவா? மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். இனியாவது மு.க.ஸ்டாலின் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்