கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு, 20 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காமல் அவதிப்படுவதாக மனு

20 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காததால் கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் திரண்டனர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

Update: 2020-03-02 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணியில் இருந்தே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர். வழக்கமாக குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் வந்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, நாங்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேல் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு வீட்டுவரி, மின் இணைப்பு வரி போன்றவற்றை முறையாக செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் பலனளிக்கவில்லை. இதனால் நாங்கள் பட்டா கிடைக்காமல் தற்போது வரை அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு உடனடியாக பட்டா கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் கலெக்டரிடம் சென்று மனு அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் கூட்ட அரங்குக்கு சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்