மத்திய அரசு திட்டத்தின் கீழ் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Update: 2020-03-03 21:45 GMT
ஊட்டி,

மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள் மற்றும் தகுதி உள்ள விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் பல விவசாயிகளுக்கு அட்டை வழங்கப்பட இருக்கிறது.

இந்த அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று சிறப்பு சலுகையுடன் வங்கி கடன் பெறலாம். அட்டையை ஏற்கனவே பெற்று உள்ள பயனாளிகள் கடன் தொகையின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர் அட்டை வைத்துள்ளவர்கள் கடன் அட்டையை புதுப்பித்து கொள்ளவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதி பெறவும் முடியும்.

உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் தங்களது வங்கி கிளையில் விண்ணப்பித்து பெறலாம்.

மேலும் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்த்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடன் அட்டை பெற விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள், வேறு எந்த வங்கி கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்