அமைச்சர் கந்தசாமி தலைமையில் பால் உற்பத்தியை பெருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2020-03-03 23:48 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம்(பாண்லே) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாண்லே பூத் மற்றும் முகவர்கள் மூலமாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாண்லே நிறுவனத்தின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உரிய பணத்தை செலுத்தாத காரணத்தாலும், பால் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. உள்ளூர் பகுதியில் இருந்தும் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் நாள் ஒன்று 55 ஆயிரம் லிட்டர் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனவே அமைச்சர் கந்தசாமி கடந்த மாதம் 20-ந் தேதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து, புதுவை மக்களின் தேவைக்காக 55 ஆயிரம் லிட்டர் பால் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் புதுவையில் பால் வளத்தை பெருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது ‘புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்கி நாம் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கு மானிய விலையில் கறவை மாடுகள், மாட்டு தீவனம் வழங்க வேண்டும். இதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். அதன் மூலம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்க தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அதிகாரிகள் அதற்கான அறிக்கையை விரைவில் தயாரித்து வழங்க வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் அரசு துறை செயலாளர் அன்பரசு, பாண்லே மேலாண் இயக்குனர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்