பாதாள சாக்கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது

பாதாள சாக்கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-04 23:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள நச்சுத்தொட்டி மற்றும் பாதாளசாக்கடை குழிகளில் பணிகளை மேற்கொள்ளும்தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. உதவிப்பொறியாளர் ரமே‌‌ஷ் வரவேற்றார்.

இதில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள தனியார் செப்டிக்டேங்க் வாகன தொழிலாளர்கள், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி அதிகாரி

இதில் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘செப்டிக்டேங் மற்றும் பாதாள சாக்கடை ஆள்நுழை குழிகளில் வேலை செய்பவர்கள் அதனுள் இறங்கக் கூடாது. உங்களிடம் வழங்கப்பட்டுள்ள கருவிகளை கொண்டே அடைப்புகளை சரி செய்ய வேண்டும். மேலும் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. அதே போல் மது அருந்துவிட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது என்று சட்டம் உள்ளது. தொழிலாளர்களுக்கு குரூப் காப்பீடு கட்டாயம் செய்திருக்க வேண்டும். தனியார் செப்டிக்டேங் வாகனங்கள் மாநகராட்சியில் பதிவு செய்திருக்க வேண்டும்.’’என்றார்.

முடிவில் சுகாதார ஆய்வாளர் பொன்னர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்