பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம்: கமி‌‌ஷன் இன்றி விவசாயிகள் விற்கலாம்

பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதிவாரம் புதன்கிழமைதோறும் பருத்தி-மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் விவசாயிகள் பங்கேற்று கமி‌‌ஷன் இன்றி தங்களது பொருட்களை விற்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.

Update: 2020-03-04 23:00 GMT
பெரம்பலூர்,

மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளை பொருட்களுக்கு பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் எளம்பலூர் காந்தி நகரில் உள்ள விற்பனைக்குழுவின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு பருத்தி, மக்காச்சோளத்தை ஏலம் விட விவசாயிகள் குறைந்தஅளவே வந்தனர். இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோள விவசாயிகளின் மேம்பாடு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இந்திரா, உழவர் பயிற்சி துணை இயக்குனர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.

புதன்கிழமைதோறும்...

வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் விவசாயிகளிடையே பேசுகையில், மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளை பொருட்களுக்கு பெரம்பலூர் விற்பனைக்குழுவின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு நல்ல விலை பெறுவதோடு சரியான எடை மற்றும் கமி‌‌ஷன், தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம். இந்த மறைமுக ஏலத்தில் இந்திய பருத்தி கழகம், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால், தங்களின் விளை பொருட்களின் தரத்திற்கான விலையினை பெறலாம். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்குழு செயலாளரை 82209 48166, 73738 77047 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேளாண் விளைபொருட்களை உலர்த்திக்கொள்ள உலர்களம் வசதியும், வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து கொள்வதற்கு நவீன சேமிப்பு கிட்டங்கி வசதியும், ரூ.3 லட்சம் வரையில் பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கும், அதிகாரிகள் பதிலளித்து பேசினர்.

மேலும் செய்திகள்