நெல்லை மாநகராட்சிக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்கள்

மக்கும் குப்பை, மக்காத குப்பையை அள்ள ரூ.22 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

Update: 2020-03-05 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாநகராட்சியில் பகுதியில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பையை அள்ள ரூ.22 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

3 சக்கர வாகனங்கள் 

நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் சேகரிக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை விரைவாக அள்ளி தூய்மைப்படுத்தும் பணியை சிறப்பான முறையில் செய்யவேண்டும் என்பதற்காக, நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையின் சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 10 மூன்று சக்கர வாகனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, அதன்படி, முதற்கட்டமாக நேற்று பேட்டரியில் இயங்கும் 4– மூன்று சக்கர வாகனங்களை, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து வங்கி மேலாளர் ராஜேஷ், மாநகராட்சி ஆணையாளர் கண்ணனிடம் வழங்கினார்.

அதன்பின்பு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், பேட்டரியில் இயங்கும் 4– மூன்று சக்கர வாகனங்களுக்கான சாவியை தூய்மைப்பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் 

நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளிலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் பொருட்டு, பேட்டரி மூலம் இயங்கும் 270–மூன்று சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. அந்த வண்டிகளில் தலா ஒரு வாகனத்தில் 300 முதல் 450 கிலோ வரை குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, மாநகராட்சி மைய வளாகத்தில் செயல்படும் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையானது கூட்டாண்மை சமூக பொறுப்பு நடவடிக்கையின் கீழ், பேட்டரி மூலம் இயங்கும் 10–மூன்று சக்கர வாகனங்களை வழங்க முன்வந்து முதற்கட்டமாக, 4–மூன்று சக்கர வாகனங்களை வழங்கி உள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், மீதமுள்ள 6–மூன்று சக்கர வாகனங்களை வழங்க உள்ளார்கள்.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், உதவிஆணையாளர் சொர்ணலதா, மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்