தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

Update: 2020-03-05 22:15 GMT
சிவகங்கை,

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலா்களை கண்டறிந்து அவா்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து அவா்களுக்கு “தமிழ்ச் செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருது வழங்குவதுடன் ரூ.25 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த ஆண்டிற்கான “தமிழ்ச் செம்மல்” விருது பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெறவிரும்பும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுயவிவரக் குறிப்பு, 2 புகைப்படங்களுடன், தமிழ் வளர்ச்சிக்காக தாங்கள் ஆற்றிய பணிக்கான சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்