பெண்கள் அமைப்பினர் அனுமதியின்றி போராட்டம்; 56 பேர் கைது

சேலத்தில் அனுமதியின்றி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-07 00:13 GMT
சேலம்,

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமான நேற்று தமிழகம் முழுவதும் பெண்களுக்கான சம உரிமைகளை வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வைரமணி தலைமை தாங்கினார். இதில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் உதயகுமார், துணைத்தலைவர் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த போராட்டத்தில், அனைத்து உழைக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அனைத்து அமைப்புகளிலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்துதலை தடுக்க புகார் கமிட்டி அமைக்க வேண்டும், முறைசாரா பெண் தொழிலாளர்களின் நலவாரிய பலன்களை உடனுக்குடன் பெற்றிட அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் 56 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றி நேரு கலையரங்கில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்