கூடலூரில் எஸ்டேட் மேற்பார்வையாளரை தந்தத்தால் குத்திய காட்டுயானை

கூடலூரில் எஸ்டேட் மேற்பார்வையாளரை தந்தத்தால் காட்டுயானை குத்தியது. அந்த காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி பொதுமக்கள்போராட்டம் நடத்தினர்.

Update: 2020-03-07 23:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோத்தர்வயல், மண்வயல், பாடந்தொரை உள்பட பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் பகுதியில் காட்டுயானையால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை இழந்து உள்ளனர். மேலும் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர். எனவே காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீமதுரை, முதுமலை மற்றும் புலிகள் காப்பக எல்லையோரம் 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகழிகளை ஆழப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் காட்டுயானை வருகையை தடுக்க முடியவில்லை. இதனால் மண்வயல் பகுதியில் இரவில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குடல் சரிந்தது

இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமுறம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு மாணிக்கம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அங்குள்ள அரசு பள்ளிக்கு அருகே புதர் மறைவில் இருந்து வெளியே வந்த இருந்த காட்டு யானை ஒன்று திடீரென மாணிக்கத்தை விரட்டியது. இதை சற்றும் எதிர்பாராத அவர், காட்டு யானையிடம் சிக்கினார். தொடர்ந்து காட்டு யானை அவரை தாக்கியது. மேலும் தனது தந்தத்தால் மாணிக்கத்தின் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து அவர் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டியடித்தனர். மேலும் படுகாயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரிந்த குடலை டாக்டர்கள் குழுவினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாணிக்கம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம் காட்டு யானை நடமாட்டம் இரவு, பகலாக உள்ளது என்றும், அதை தடுக்க நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி ஏழுமுறம், கோத்தர்வயல் பகுதி மக்கள் சுமார் 200 பேர், கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் மணிதுரை உள்பட ஏராளமான போலீசார் வன அலுவலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் அல்லது அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணிக்கத்தை தாக்கிய காட்டு யானையின் உடலில் ஆறாத புண்கள் உள்ளது. இதனால் சீழ் வடிந்த நிலையில் சுற்றி வருவதால் பொதுமக்களை தாக்குகிறது. எனவே மக்களின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சமயத்தில் வன அலுவலர் அலுவலகத்தில் இல்லை. அவருக்கு பதிலாக கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் மனுக்கள் அளித்தனர்.

மேலும் செய்திகள்