18 வயது பூர்த்தி அடையாத பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை ; கலெக்டர் எச்சரிக்கை

18 வயது பூர்த்தி அடையாத பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

Update: 2020-03-07 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலம் மற்றும் சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குழந்தைகள் நல குழுமத்தலைவர் சிவ கலைவாணன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் குழந்தை திருமணங்கள் நடத்துபவர்கள் மற்றும் ஏற்பாடு செய்பவர்கள் மீது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கலாம்.

ஆண்கள் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களை திருமணம் செய்யக்கூடாது. அதையும் மீறி திருமணம் செய்யும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரசவிக்கும்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் அதிகமாகி விடுகிறது. திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தில் திருமணம் செய்ய வருபவர்களிடம் பெண்ணுக்கு 18 வயது முடிவடைந்துள்ளதா?, ஆணுக்கு 21 வயது முடிவடைந்துள்ளதா? என உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். கோவில்களில் திருமணம் பதிவு செய்ய வரும் நபர்களிடம் சான்றிதழ்கள் பெற்று பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து திருமண மண்டப வாயில்களிலும் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து அறிவிப்புப் பெயர் பலகை வைக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும். 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடைவது வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது.

18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் அவர்களின் கல்வி தடைபடுதல், கருக்கலைவு ஏற்படுதல், கருக்கலைவால் சத்துப்பற்றாக்குறை, உடல் மற்றும் மனம் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது. மேலும் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் பணிக்கு செல்லும் நிலை ஏற்படுதல், குடும்ப பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்வது போன்ற தீமைகள் ஏற்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தொழிற்கூட அலுவலர் ஓம்பிரகாசம், திருமண மண்டப உரிமையாளர்கள், சங்கத்தலைவர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்