திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2020-03-07 22:30 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பெற்றதாகும். பொன்னார் மேனியனே என்ற பாடல் இக்கோவிலுக்காக பாடப்பட்ட மிகவும் பிரபலமான பாடலாகும். மேலும் இக்கோவிலின் முன்பு மேற்கிலிருந்து கிழக்காக வந்து கொண்டிருக்கும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்னால் வந்தவுடன் தெற்கிலிருந்து வடக்காக ஓடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மற்றும் இக்கோவிலின் விருச்சகம் பனை மரம் ஆகும்.

இங்கு பல நூற்றாண்டுகளாக ஒரு பனைமரம் இருந்து வருவது இக்கோவிலின் மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. இத்தைகய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று மாசிமக பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஒரு வாரமாக ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் சாமிகள் வீதிஉலா நடைபெற்றது.

தேரோட்டம்

இதனை தொடர்ந்து நேற்று சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கு நேற்று பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது.

தேரை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், வடிவழகன், இளந்தைகூடம் தேவர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். கோவில் முன்பு தொடங்கிய இந்த தேரோட்டம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், பானளயபாடி, அரண்மனைகுறிச்சி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி, சேனாபதி முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

தேரோட்டத்தையொட்டி அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்பாராத விதமாக விபத்துகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடராஜர் புறப்பாடு, இடப வாகன காட்சி மற்றும் கொடி இறக்கம் ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, கோவிலின் செயல் அலுவலர் மணி மற்றும் இக்கோவிலின் அர்ச்சகர் கணேஷ் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்