கிரு‌‌ஷ்ணகிரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 582 பேருக்கு பணி நியமன ஆணை

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 582 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2020-03-07 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கிரு‌‌ஷ்ணகிரி அருகே உள்ள செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வின்சென்ட் மகிமைராஜ் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறியதாவது:- படித்த, வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். கல்வி பயின்று நாம் நல்ல வேலைக்கு செல்வது தான் நமக்கான அடையாளம். சமுதாயத்தில் நம்மை பிறர் அடையாளம் காண்பது நமது வேலைவாய்ப்பினை வைத்து தான். தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

582 பேர் தேர்வு

இந்த முகாமில் கிரு‌‌ஷ்ணகிரி, ஓசூர், சேலம், கோவை, திருப்பூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை சேர்ந்த 77 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் 4 தனியார் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் 1,546 பேர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கட்ட தேர்வுகளில் 582 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 582 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வழங்கினார். இதில், கல்லூரியின் இயக்குனர் குமரேசன், முதல்வர் கந்தசாமி, துணை முதல்வர் முகமது ஆசிப், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மோனி‌ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்