ஏற்காட்டில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

ஏற்காட்டில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-03-07 23:30 GMT
ஏற்காடு,

ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும். இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி முன்னேற்பாடாக ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ஐந்தினை பூங்கா ஆகிய பூங்காக்களில் தோட்டக்கலைத்துறை சார்பில், மலர் செடி விதைகள் நடவு செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மலர் கண்காட்சி ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அண்ணா பூங்கா சாலையோரம் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வருபவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.

478 ஏக்கர்

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம், வியாபாரிகளுக்கு புதிதாக கட்டியுள்ள கடைகளை வழங்குமாறு கலெக்டர் கூறினார். அந்த கடைகள் போதாத நிலையில், சந்தை வளாகத்தில் கடை நடத்த அனுமதிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

பின்னர், சேர்வராயன் கோவில் அருகில் உள்ள 478 ஏக்கர் பாக்சைட் மலைக்குன்றை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. அதன் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி, அந்த இடத்தை வனத்துறைக்கு ஒதுக்கி, மரக்கன்றுகள் நட்டு வனத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது குறித்து தாசில்தார் ரமணியிடம், கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்