கொரோனா வைரஸ் எதிரொலி: ஒரு கிலோ கோழிக்கறிக்கு 10 முட்டை இலவசம் விற்பனை களை கட்டியது

கொரோனா வைரஸ் எதிரொலியால், திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறிக்கு 10 முட்டை இலவசமாக வழங்கப்பட்டது.;

Update:2020-03-09 04:30 IST
திசையன்விளை, 

கொரோனா வைரஸ் எதிரொலியால், திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறிக்கு 10 முட்டை இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் விற்பனை களை கட்டியது.

கொரோனா வைரஸ் 

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் அங்கிருந்து கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருப்பதற்காக அந்தந்த நாடுகளை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தமிழகத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக வதந்தி பரவியது. இதனால் பிராய்லர் கோழிக்கறி விற்பனை மந்தமானது.

10 முட்டை இலவசம் 

இந்த நிலையில் பிராய்லர் கோழிக்கறி விற்பனையை பெருக்க நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் ரூ.130–க்கு ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறி வாங்கினால் 10 முட்டை இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், பிராய்லர் கோழிக்கறி வாங்குவதற்கு அந்த கடைக்கு குவிந்தனர். இதனால் அந்த கடையில் பிராய்லர் கோழிக்கறி விற்பனை களை கட்டியது.

மேலும் செய்திகள்