திருப்பத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் தனிவார்டு அமைப்பு - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

Update: 2020-03-08 22:15 GMT
திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் தொடர்பாக நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை, கல்வி மற்றும் உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.டி.சுரே‌‌ஷ், காணொலி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பது பற்றி விளக்கி பேசினார்

பின்னர் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் இருந்து வியாபார நிமித்தமாக பலர் வெளிநாடு சென்று வர வாய்ப்பு உள்ளது. அவர்கள் யார்? என்பது குறித்து நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்து அவர்களின் வீடுகளுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுடைய ரத்த மாதிரிகளை சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.

கெரோனா பாதிப்பு இங்கு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் முறையாக கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்.

போக்குவரத்து துறை சார்பில் பஸ்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக உடல் நலம் பாதித்தவர்கள், முதியவர்கள் அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நோய் தாக்கியவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பதால், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு தேவையான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சங்கரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்