விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க ஆடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க ஆடுகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணை வேந்தர் பாலசந்திரன் கூறினார்.

Update: 2020-03-08 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விடுதிவிழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலசந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், அடுத்த 30 ஆண்டுகளில் கால்நடை துறை சார்ந்த உணவு பொருட்கள் அதிக அளவில் தேவைப்படும். அந்த வகையில் தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்கள் தயார்படுத்தபடுகிறார்கள். விவசாயிகள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மாணவர்களுக்கு பரிசு

இதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேல் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அவர் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்கள் ஒன்றிணைந்து ஆராய்ச்சி செய்யும்போது புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றார்.

முன்னதாக நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மோகன் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரியின் விடுதி காப்பாளர் பழனிவேல் கல்லூரி விடுதியின் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் மன்ற தலைவர் பொன்னுதுரை வரவேற்று பேசினார். இறுதி ஆண்டு மாணவ பிரதிநிதி சரவணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்