திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், முகக்கவசம் அணிந்து பணிபுரியும் டாக்டர்கள், பணியாளர்கள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய தொடங்கி உள்ளனர்.

Update: 2020-03-09 22:45 GMT
திருப்பத்தூர்,

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் டெல்லி, தெலுங்கானா பகுதிகளை சேர்ந்தவர்கள் இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்திலும் சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் 9 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 23 பேர் என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குனிச்சி பகுதியில் தென்கொரியாவில் இருந்து கணவன், மனைவி 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்கள் வழக்கமாக கவசம் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், உதவியாளர்கள் முகக் கவசம் அணிந்து சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளே நுழையும்போது கை கழுவும் மருந்து மூலம் கைகழுவிய பின்னர் உள்ளே சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பகுதியில் பயணிகள் பலர் முக கவசம் அணிந்து செல்வதையும் காண முடிந்தது.

மேலும் செய்திகள்