பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை தொல். திருமாவளவன் பேச்சு

பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி, போதுமானதாக இல்லை என்று தொல்.திருமாவளவன் எம்.பி.பேசினார்.

Update: 2020-03-10 23:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆலத்தூர் வட்டாரம் கொளக்காநத்தம் கிராமத்தில் சுகாதார திருவிழா நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி வரவேற்றார். சுகாதார திருவிழாவிற்கு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொல்.திருமாவளவன் எம்.பி. குத்து விளக்கேற்றி சுகாதார திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுகாதார திருவிழா வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கிராமம் தோறும் நடத்த வேண்டிய சூழ்நிலையில் நமது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) தேசிய அளவில் கர்ப்பிணிகள் சர்க்கரை அளவை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நாளாக அமைந்துள்ளது. சுகாதாரம் நமது கையில் தான் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பரவி வருகிறது. நமக்கு கொரோனா தாக்குதல் வராது என்று அலட்சியமாக இருந்துவிட கூடாது. முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேம்பாட்டு நிதி

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரூ.2 கோடி மேம்பாட்டு நிதியாக தமிழக அரசு வழங்குவது போல், மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு என்று ரூ.2 கோடி என கணக்கிட்டு 6 தொகுதிக்கு ரூ.12 கோடி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி வழங்கினால் அனைத்து தொகுதி மக்களுக்கும் நலதிட்டங்களை நிறைவேற்றலாம், ஆனால் ரூ.5 கோடி மட்டும் வழங்குவது போதுமானதாக இல்லை. கொளக்காநத்தம் கிராமத்தில் 30 படுக்கை வசதிகள் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டுவதற்கு கோரிக்கை வைத்து உள்ளர்கள் இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவாகும். ஆதலால் இவ்வளவு மிகப்பெரிய தொகையை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரே இடத்திற்கு வழங்க முடியாது. எனவே நமது தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.

ஊர்வலம்

இதில் கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பெட்டகம், வளர் இளம் பருவத்தினர் பெட்டகம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் நலப்பணிகள் இணை இயக்குனர் திருமால், தொற்றா நோய் மருத்துவர் விவேகானந்தம், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நீரிழிவு நோயின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருமாவளவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முடிவில் கொளக்காநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மகா லட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்