திருவாரூரில் குடிநீரில், கழிவுநீர் கலக்கிறதா? நகராட்சி ஆணையர் ஆய்வு

திருவாரூரில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறதா? என்பது பற்றி நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-11 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் துர்க்காலயா ரோடு, வ.உ.சி. தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் திடீரென வாந்தி-பேதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த 8 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை

மருத்துவமனைகளில் நடத்திய பரிசோதனையில் குடிநீர் பிரச்சினையால் தான் வாந்தி-பேதி ஏற்பட்டது தெரிய வந்தது. நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்படும் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வந்ததால் வாந்தி-பேதி ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று குடிநீர் மாதிரியை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். வாந்தி-பேதி பாதிப்பு காரணமாக குடிநீரை குடிப்பதற்கே அச்சமாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

ஆணையர் ஆய்வு

இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை நகராட்சி ஆணையர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு, குடிநீரில் கழிவுநீர் கலக்கிறதா? என ஆய்வு செய்தார்.

இதையொட்டி மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இதனிடையே குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்