தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.33 லட்சம் அபராதம்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.33 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-11 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சரக போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கள் அறிவுரைப்படி கடந்த மாதம் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டன.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர். கடந்த மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மொத்தம் 9 ஆயிரத்து 927 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

ரூ.33 லட்சம் அபராதம்

இதில் 1,552 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. உடனடியாக ரூ.12 லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது. வசூலிக்க வேண்டிய அபராத தொகையாக ரூ.20 லட்சத்து 16 ஆயிரத்து 400 நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் ரூ.33 லட்சத்து 14 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு முறையாக வரி கட்டாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களிடம் இருந்து சாலை வரியாக ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 875 வசூலிக்கப்பட்டது.

பறிமுதல்

அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற 203 வாகனங்கள் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிய 360 பேருக்கும், காப்புச்சான்று இல்லாத 213 வாகனங்களுக்கும், கண் கூசும் முகப்பு விளக்கு பொருத்திய 66 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று இல்லாத 88 வாகனங்களுக்கும், ஒளிரும் சிவப்பு பிரதிபலிப்பு இல்லாத 164 வாகனங்களுக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 42 பேருக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 208 பேருக்கும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 27 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 209 பேருக்கும், அதிக எடை ஏற்றி கொண்டு இயக்கிய 75 வாகன ஓட்டிகளுக்கும் தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்