ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்கக்கோரி உண்ணாவிரதம் நாகர்கோவிலில் நடந்தது

ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்கக்கோரி நாகர்கோவிலில் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2020-03-12 00:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடியப்பட்டணம், முட்டம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம்துறை, பூத்துறை, தூத்தூர், குறும்பனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 மீனவர்களும் ஈரான் நாட்டில் கீஸ், சாரக், லாவன், புஷர், கங்கோன் உள்ளிட்ட பல இடங்களில் அரேபிய முதலாளிகளிடம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாக பரவி வருவதால் அங்கு மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் வெளியேறவும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மீனவர்களுக்கு சரிவர உணவு பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி சமூக வலைதளங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதம்

எனவே ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மீனவர்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்து வரும்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்களை உடனடியாக மீட்கக்கோரியும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய சதீஸ் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் மற்றும் மீனவர்களின் உறவினர்கள், ஆண்கள், பெண்கள் என உண்ணாவிரத போராட்டத்தில் எராளமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்