கருப்பூர் அருகே சிமெண்டு கல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

கருப்பூர் அருகே சிமெண்டு கல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் பலியானார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Update: 2020-03-12 22:30 GMT
கருப்பூர்,

சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற ராம்குமார். இவர் வெள்ளாளப்பட்டி சேமியாகாடு பகுதியில் கொங்குநாடு ஹாலோ பிரிக்ஸ் என்ற பெயரில் சிமெண்டு கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் கருப்பூர் தேக்கம்பட்டி அருகே உள்ள தே. கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் துரைசாமி என்பவரது மனைவி சாந்தி (வயது 37). கூலி வேலை பார்த்து வந்தார்.

தினமும் மாலையில் சிமெண்டு கல் தயாரிக்கும் எந்திரத்தை நிறுத்தி விட்டு அதை ஊழியர்கள் சுத்தம் செயவது வழக்கம் ஆகும். அதன்படி சாந்தி நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள சிமெண்டு கல் தயாரிக்கும் எந்்திரத்தை நிறுத்தி விட்டு அதை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

சாைல மறியல்

இவர் எந்திரம் சுத்தம் செய்வது தெரியாத அங்கிருந்த ஊழியர் ஒருவர் திடீரென்று எந்திரத்தை இயக்கி உள்ளார். இதனால் எந்திரத்தில் சிக்கி சாந்தி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த போது சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சாந்தி குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி சாலையில் சாந்தியின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த சூரமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மறியல் போராட்டம் நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்த நிலையில் தொழிற்சாலை உரிமையாளர் மணி என்கிற ராம்குமாரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்