ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து புள்ளிமான் வேட்டை - மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது

வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து புள்ளிமானை கொன்ற கும்பலை வனத்துறையினர் தேடிவருகின்றனர். மேலும் ஒரு வெடிகுண்டை கைப்பற்றினார்கள்.

Update: 2020-03-13 22:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் குன்னூர் பீட் வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், சருகு மான்கள், மிளாக்கள், காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன.

இரவிலும், அதிகாலையிலும் வன விலங்குகள் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் இரைதேடி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஊருணி பகுதியில் ஒரு வயது உடைய புள்ளிமான் ஒன்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் அந்த பகுதியில் கிடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வனத்துறையினர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அங்கு மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு சிக்கியது. பலியாகிக் கிடந்த மானின் உடலையும், நாட்டு வெடிகுண்டையும் கைப்பற்றி அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் இடத்தை கண்டறிந்து அதனை வேட்டையாடும் நோக்கத்தோடு வெடிகுண்டுகள் அங்கு பதுக்கி வைத்திருந்தது வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அதில் ஒரு வெடிகுண்டு புள்ளிமானை பலிவாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்