அகழ்வாராய்ச்சி பணி: கொந்தகையில் 8 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

அகழாய்வின் போது கொந்தகையில் ஒரே இடத்தில் 8 முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன.

Update: 2020-03-13 22:00 GMT
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிவடைந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி மாநில அரசு சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கீழடியில் நீதி அம்மாள் என்பவரின் நிலத்தில் குழிகள் தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் செய்ததில் சிறிய பானைகள், செங்கற்களால் ஆன சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கொந்தகை ஊராட்சியில் உள்ள மேலபொட்டல் பகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

அங்கு 2 அடி ஆழத்திலேயே பழமையான பொருட்கள் கிடைக்க தொடங்கியுள்ளன. ஒரு குழியில் மட்டும் 8 முதுமக்கள் தாழிகளும், சிறிய பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வெயில் கடுமையாக இருப்பதால் அகழாய்வு பொருட்கள் சேதமாகும் நிலை உள்ளது. இதனால் குழிகளின் மேற்பகுதியில் கொட்டகை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்