வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது ; கள்ளக்காதல் தகராறில் கொன்றதாக வாக்குமூலம்

குடியாத்தத்தில் வாலிபர் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2020-03-14 22:15 GMT
குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் திருநகரை சேர்ந்த அப்சர் என்பவருடைய மகன் சுல்தான்பாஷா (வயது 23). பெங்களூருவில் கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை கவுண்டய மகாநதி ஆற்றுப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தலை நசுங்கியநிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடத்தில் ரத்தக்கறையுடன் ஒரு கல் இருந்தது. இதனால் அவரை கல்லை தலையில் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவி, தண்டபாணி, யுவராஜ், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ், ஏட்டுகள் ராமு, நவீன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

தனிப்படை போலீசார் சுல்தான்பாஷாவின் நண்பர்கள், அவருக்கு பழக்கமானவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடியாத்தம் மொய்தீன்பேட்டை பிரான் நகரைச் சேர்ந்த பாப்ஜான் என்பவரின் மகன் ஹயாத்பாஷா (31) என்பவரிடம் விசாரிக்கும்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறியுள்ளார்.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹயாத்பாஷாவும், சுல்தான்பாஷாவும் நண்பர்கள். ஹயாத்பாஷா வீட்டுக்கு சுல்தான்பாஷா வந்து செல்லும்போது ஹயாத்பாஷாவின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஹயாத்பாஷா தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்துள்ளார். மேலும் உறவினர்களும் அவர்களை கண்டித்துள்ளனர். ஆனால் சுல்தான்பாஷா கள்ளத்தொடர்பை விடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஹயாத்பாஷா சுல்தான்பாஷாவை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி கடந்த 11–ந் தேதி இரவு ஹயாத்பாஷா, சுல்தான்பாஷாவை போன் செய்து அழைத்துள்ளார். இரவு 8 மணி அளவில் இருவரும் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆற்றுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கினர். இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்தனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் சுண்ணாம்புபேட்டை சுடுகாடு அருகே சென்று மீண்டும் இருவரும் மது அருந்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய சுல்தான்பாஷா மயங்கினார். அப்போது அங்கிருந்த ஹாலோபிரிக்ஸ் கல்லை எடுத்து அவரது தலையில் ஹயாத்பாஷா போட்டார். மேலும் அவர் சாகும்வரை கல்லை எடுத்து தலை மற்றும் முகத்தில் போட்டுள்ளார். இதில் அவர் இறந்ததும் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்