40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

காரிமங்கலம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

Update: 2020-03-15 00:00 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காட்டு சீகலஅள்ளி மலைப் பகுதியில் 2 ஆண் யானைகள் சுற்றித்திரிந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர்.

மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன. பின்னர் அந்த 2 யானைகளும் தேவர்முக்குளம், காட்டு சீகலஅள்ளி கிராமங்களில் சுற்றித் திரிந்தன.

கிணற்றில் விழுந்தது

இந்த நிலையில் தேவர்முக்குளம் பகுதியில் முகாமிட்டிருந்த 2 யானைகளும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் காட்டு சீகலஅள்ளி கிராமத்திற்கு வந்தன. அப்போது சக்திவேல் என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழ விவசாய கிணற்றில் ஒரு யானை நிலைதடுமாறி தவறி விழுந்து விட்டது. இதனால் மற்றொரு யானை கிணற்றை சுற்றிலும் பிளிறியபடி வந்து கொண்டு இருந்தது.

யானையின் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பிளிறிய அந்த யானை அங்கிருந்து மலைப்பகுதிக்கு சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பாலக்கோடு மற்றும் கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலக்கோடு வனச்சரக அலுவலர் செல்வம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மீட்கப்பட்டது

இதையடுத்து அவர்கள் 2 பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து, சுமார் 40 அடி ஆழத்திற்கு கிணற்றின் அருகே பள்ளம் தோண்டி யானை மேலே வரும் வகையில் மண் பாதை அமைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து மண் பாதை வழியாக யானை மீட்கப்பட்டது.

பின்னர் அந்த யானையை வனத்துறையினர் சொக்கம்பட்டி காப்புக்காட்டிற்கு விரட்டினர். அந்த யானை மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மற்றொரு யானையுடன் சேர்ந்து அடர்ந்த பகுதிக்கு சென்றது. விவசாய கிணற்றில் யானை விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்