கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-14 23:30 GMT
கோவை,

கோவை ரெயில் நிலையம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படு வதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு வின்சென்ட்டுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இறங்கிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து சோதனை நடத்திய போது கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்த சிலம்பரசன்( வயது 34), தேவாரத்தை சேர்ந்த பிரபாகரன்(36), சிங்கராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கோவை வழியாக ரெயிலில் கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

ரெயில் மூலம் கடத்தல்

ஆந்திராவில் கஞ்சா ரகசியமாக பயிரிடப்பட்டு கடத்தி வரப்படுகிறது. அங்கு ஒரு கிலோ கஞ்சாவை அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்துக்கு கடத்தல் ஆசாமிகள் வாங்குகிறார்கள். பின்னர் அதை பஸ் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தி வந்து கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் ஒரு கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள்.

அதை சிறு வியாபாரிகள் வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு விற்கிறார்கள். சிறு வியாபாரிகள் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.16 ஆயிரம் வரை விற்கிறார்கள். ஆந்திராவில் கஞ்சா வாங்கும் கடத்தல் ஆசாமிகள் அதை இரு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். போலீசார் சோதனை நடத்தினாலும், எளிதில் தப்பி விடலாம் என்பதால் ரெயில் மூலம் கஞ்சா கடத்துகிறார்கள். ஆனாலும் தீவிர சோதனை நடத்தி கஞ்சா கடத்தலை தடுத்து வருகிறோம். கைதான 3 பேரும் இதற்கு முன்பு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்