சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து சென்னை அய்யப்பன் கோவில்களில் விரதத்தை முடிக்கும் பக்தர்கள்

கொரோனா வைரஸ் எதிரொலியால் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து, சென்னையில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.

Update: 2020-03-14 23:52 GMT
சென்னை, 

சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.

இந்த நாட்களிலும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தற்போது பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறு கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையே சபரிமலை தேவசம் போர்டும் வலியுறுத்தியது.

நடை திறப்பு

சபரிமலை வருவதற்காக மாலை அணிந்து, விரதம் இருப்பவர்கள், உள்ளூர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மாலையை கழற்றி, விரதத்தை முடித்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் சபரிமலைக்கு பக்தர்கள் வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனை ஏற்று அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து, உள்ளூரில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மாலைகளை கழற்றி விரதத்தை முடித்து கொள்கின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மீனம் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் செல்வதை தற்போது தவிர்த்து உள்ளனர்.

சென்னையில் விரதம் முடிப்பு

அந்தவகையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன்- குருவாயூரப்பன் கோவில், அண்ணாநகர், கே.கே.நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகழ்மிக்க அய்யப்பன் கோவில்கள் உள்ளன. சபரி மலைக்கு செல்ல மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு சென்னையில் உள்ள புகழ்மிக்க அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து குருசாமி மூலம் மாலையை கழற்றி விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.

இதுகுறித்து அய்யப்ப பக்தர்கள் கூறும்போது, “கொரோனா வைரஸ் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தற்போது தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், கேரள மாநில அரசும் கேட்டுக்கொண்டது. அதன்படி நாங்கள் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து உள்ளோம். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட உடன் மீண்டும் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு கண்டிப்பாக செல்வோம். தற்போது சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு வந்து நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்து மாலையை கழற்றி உள்ளோம். சபரி மலைக்கு ஒரு சிலர் மட்டும் சென்று உள்ளனர்” என்றனர்.

மேலும் செய்திகள்