பெங்களூருவில் பரபரப்பு சம்பவம் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி; ரவுடி சுட்டுப்பிடிப்பு கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்

பெங்களூருவில்போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கைதான ரவுடி கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஆவார்.

Update: 2020-03-15 00:34 GMT
பெங்களூரு,

பெங்களூரு தேவரபீச்சனஹள்ளி பகுதியில் சந்திரா என்பவர் கடந்த 11-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது குமார் என்பவர் தனது கூட்டாளிகள் அஜய், விஜய் ஆகியோருடன் அங்கு வந்து, பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்திரா, சம்பவம் குறித்து மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குமார் மீது மாரத்தஹள்ளி போலீஸ்நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவருடைய பெயர் மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க மாரத்தஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில் குமார் வர்த்தூர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் பதுங்கி இருந்த குமார், இன்ஸ்பெக்டர் ரமேசை தாக்க முயன்று விட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு, சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார். ஆனால் குமார் சரண் அடையாமல் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ், குமாரின் காலை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்ட் சுட்டார். இதில் குமாரின் காலில் குண்டு துளைத்து. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் குமாரை போலீசார் மடிக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து குமாரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். இது தொடர்பாக வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்