கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-15 21:00 GMT
கடத்தூர், 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. ஆனால் இதுவரை தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.

எனினும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு் வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருமல், சளி போன்ற தொந்தரவு உள்ளவர்கள் பணியாற்றும் இடங்களில் முககவசம் அணிந்துள்ளார்கள்.

அரசு பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. பஸ்சின் இருக்கைகள், சக்கரங்கள், உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் போக்குவரத்து பணியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோபியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க பொதுப்பணித்துறையினர் திடீரென நேற்று மதியம் 1 மணி அளவில் தடை விதித்தனர். இதனால் அணையில் இருந்து குளித்து கொண்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அணைக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அணையின் முகப்பிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளும் வைக்கப்பட்டன. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மொத்தம் 15 நாட்கள் இந்த தடை நீடிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள 3 தியேட்டர்களில் நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்