கல்வராயன்மலையில், 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர்.

Update: 2020-03-15 22:00 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி, அதனை சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வராயன்மலை கல்படை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் தனிப்படை போலீசார் கல்படை வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள நீரோடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 20 பேரல்களில் மொத்தம் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதப்படுத்தி வைத்திருந்தது தொடர்பாக கல்படையை சேர்ந்த உதயகுமார், பாபு ஆகியோர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதை முழுமையாக தடுக்க தனிப்படை போலீசார் தீவிர பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்