பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பனை மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2020-03-15 22:00 GMT
ராமநாதபுரம்,

தமிழக பனை விவசாயிகள், சமூக நல ஆர்வலர்கள் சார்பில் பனை மாநாடு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அழிவின் விளிம்பில் உள்ள பனை மரங்களை பாதுகாக்கவும், பனை பொருட்களின் உற்பத்தியை பெருக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான பனை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்கு பனை எனும் கற்பகதரு அமைப்பின் நிறுவனர் வக்கீல் கவிதா தலைமை தாங்கினார். அகில இந்திய சத்ரிய நாடார் சங்க பொது செயலாளர் காந்திராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். செல்வராமலிங்கம் வரவேற்று பேசினார்.

இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:- பனை மரம் கற்பகதரு என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். பனை மரங்கள் அதிக அளவில் இருந்தால் தான் நீர்நிலைகள் காப்பாற்றப்படும். பனை வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை சீனிக்கு மாற்றாக உலக அளவில் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது போல பனை தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் நலவாரியம் அமைக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். பனைதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பனை தொழிலாளர்கள் மரணமடைந்தால் இழப்பீடு வழங்குவதும், பனை நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்தவும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்காதவர்கள் மீது அபராதத்தொகை உயர்த்தப்படும். கீழடியில் அகழாய்வு பணி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரில் விரைவில் தொல்லியல் ஆய்வுப்பணி தொடங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழாய்வு குறித்த அறிக்கை பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ., பரமக்குடி சதன் பிரபாகர் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, தமிழ்நாடு பனைவெல்ல வாரிய தலைவர் சேதுபாலசிங்கம், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேசுவரி பிரியா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் அ.தி.மு.க. அவை தலைவர் செ.முருகேசன், முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, நகர் இளைஞர் பாசறை தலைவர் சசிக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், கீழக்கரை சுரேஷ், நகர் செயலாளர் சகுபர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டைச்சாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்