கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை கலெக்டர் உத்தரவு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-15 23:30 GMT
பென்னாகரம்,

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வெறிச்சோடியது

இதனிடையே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறையத்தொடங்கியது. விடுமுறை நாளான நேற்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையம், நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று உணவகங்கள், கடைகளில் சுற்றுலா பயணிகள் இன்றி காணப்பட்டது. இதன் காரணமாக சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் கவலை அடைந்தனர்.

மேலும் செய்திகள்