இருளர் இன மக்களுக்கு விலையில்லா சிறிய உழவு எந்திரங்கள் கலெக்டர் வழங்கினார்

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட இருளர் இன மக்களுக்கு விலையில்லா சிறிய உழவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Update: 2020-03-15 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விரிவான பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ், கிரு‌‌ஷ்ணகிரி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகா பகுதிகளை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு தலா ஒருவருக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சம் மதிப்பில் விலையில்லா சிறிய உழவு எந்திர கலப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி உழவு எந்திர கலப்பைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் மலைவாழ் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் பயன்பெறும் வகையில் விரிவான பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் விலையில்லா சிறிய உழவு எந்திர கலப்பை வழங்கப்பட்டுள்ளது.

முன்னேற வேண்டும்

தற்போது பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் காலகட்டத்தில் சிறிய உழவு எந்திர கலப்பை இருளர் இன மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின்கீழ் இருளர் இன மக்கள் விலையில்லா சிறிய உழவு எந்திர கலப்பைகளை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி நன்கு படிக்க வைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், அலுவலக கண்காணிப்பாளர் ஜெயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்